×

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். மேற்கு வங்க மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் உள்ளார். இவரது சகோதரரின் 80வது பிறந்தாள் விழாவில் பங்கேற்க வரும்படி மம்தா பானர்ஜிக்கு, இல.கணசேன் அழைப்பு விடுத்தார். அதன்படி 2 நாள் சுற்றுப்பயணமாக மம்தா பானர்ஜி நேற்று தமிழகம் வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின்போது சென்னையில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே சந்திப்பு நடக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளதால் இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மம்தா பானர்ஜி சென்றார். மம்தா பானர்ஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலுக்கே வந்து அழைத்து சென்றார். இதையடுத்து, இருவரும்  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. சந்திப்புக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார். கலைஞரின் திருவுருவ சிலையை டெல்லி அரசினர் அலுவலகத்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களை பெருமைபடுத்தியது. மேற்கு வங்க கவர்னர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்க வந்திருக்கும் சூழ்நிலையில் என்னுடைய இல்லத்துக்கு வருகை தந்து, மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்து இருக்கிறார். அதேநேரத்தில், நீங்கள் அவசியம் மேற்கு வங்கத்திற்கு வர வேண்டும், என்னுடைய விருந்தினராக வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தேர்தல் சந்திப்பு இல்லை. அரசியல் பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடைய சகோதரர் மாதிரி. அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். நல்லெண்ண அடிப்படையில் நடந்த சந்திப்புதான் இது. மேற்கு வங்க கவர்னரின் குடும்ப நிகழ்ச்சிக்காக வர வேண்டும் என்று அவர் கேட்டதற்கு இணங்க சென்னை வந்துள்ளேன். சென்னைக்கு வந்துள்ள நான், முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்ல முடியும். அவரை சந்தித்தேன். அவரது வீட்டில் தேநீர் அருந்தினேன். இரண்டு கட்சி தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் தொடர்பாக கண்டிப்பாக பேசத்தான் செய்வோம். வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும் பேசலாம். எந்த அரசியல் கட்சி தொடர்பாகவும், எந்த கருத்தையும் நான் கூற விரும்பவில்லை. மேற்கு வங்கம் மாதிரி தமிழகத்திலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஒரு சகோதரனும், சகோதரியும் பார்த்துக் கொண்ட சந்திப்புதான் இது. இதை அரசியல் ஆக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்….

The post மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Mamta Panerjy ,Tamil ,Nadu ,Chief President Mamta Panerjy ,Stalin ,Chennai ,West ,Bengal ,Mamta Panerjee ,Udwarpet ,Chief Mamta Panerjie ,Chief President B.C. G.K. ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!